Friday, October 30, 2009

ஆசிரியப்பா


ஆசிரியப்பா என்பது, தமிழின் யாப்பியலில் சொல்லப்படும் பாவகைகளுள் ஒன்று. இது அகவலோசையைக் கொண்டு அமைவது. ஆசிரியத்தளை எனப்படும் தளை வகையே இப் பாவுக்கு உரியது. எனினும் வேறு தளைகளும் இடையிடையே வருவது உண்டு.


இவ்வகைப் பாக்கள் மூன்று அடிகள் தொடக்கம் எத்தனை அடிகள் கொண்டதாகவும் இருக்கலாம். அடிகளின் எண்ணிக்கைக்கு மேல் எல்லை கிடையாது. ஆசிரியப்பாவின் அடிகள் நான்கு சீர்களைக் கொண்ட அளவடியாகவோ, மூன்று சீர்கள் கொண்ட சிந்தடியாகவோ, இரண்டு சீர்களைக் கொண்ட குறளடியாகவோ அமையலாம். ஐந்து சீர்களைக் கொண்ட அடிகளும் இடம்பெறலாம். எனினும் முதல் அடியும் இறுதி அடியும் அளவடிகளாக இருத்தல் வேண்டும்.


ஆசிரியப்பாவின் இறுதி அசை ஏ, ஓ, என், ஈ, ஆ, ஆய், அய் என்னும் அசைகளுள் ஒன்றாக இருத்தல் வேண்டும் என்ற விதியும் உண்டு.

துணைவகைகள்


ஆசிரியப்பாக்கள், அவற்றில் இடம்பெறும் அடிகளின் தன்மைகளை ஒட்டிக் கீழ்க்காட்டியவாறு நான்கு வகைப்படுகின்றன.


1.    நேரிசை ஆசிரியப்பா
2.    நிலைமண்டில ஆசிரியப்பா
3.    அறிமண்டில ஆசிரியப்பா
4.    இணைக்குறள் ஆசிரியப்பா


பொதுவான ஆசிரியப்பாவுக்குரிய இயல்புகளுடன் மேற்காட்டிய வகைகள் சில சிறப்பு அம்சங்களைக் கொண்டவையாக இருக்கின்றன. அவ்வாறான சிறப்பு அம்சங்கள் கீழே தரப்பட்டுள்ளன.


நேரிசை ஆசிரியப்பா - கடைசிக்கு முந்திய அடி மூன்று சீர்களைக் கொண்டிருத்தல்.
நிலைமண்டில ஆசிரியப்பா - எல்லா அடிகளும் நான்கு சீர்களைக் கொண்டிருத்தல்.

அறிமண்டில ஆசிரியப்பா - எல்லா அடிகளும் பொருள் முற்றிய நாற்சீர் அடிகளாய் இருத்தல்.

இணைக்குறள் ஆசிரியப்பா - இதன் முதல் மற்றும் இறுதியடிகள் தவிர்ந்த இடையிலுள்ள அடிகள் இரண்டு, மூன்று அல்லது நான்கு சீர்களைக் கொண்ட அடிகள் கலந்து அமையலாம்.

எடுத்துக்காட்டு நூல்கள்


பெரும்பாலான பழந்தமிழ் நூல்கள் ஆசிரியப்பாவில் அமைந்தவையே. புறநானூறு, அகநாநூறு, குறுந்தொகை, நற்றிணை, மணிமேகலை என்பன இப் பாவகையில் எழுந்த நூல்களுக்கு எடுத்துக் காட்டுக்கள் ஆகும்.


கலிப்பா


கலிப்பா என்பது தமிழில் உள்ள செய்யுள் வகைகளுள் ஒன்று. இன்று கிடைக்கும் பழந்தமிழ் நூல்களுள் கலித்தொகை மட்டுமே கலிப்பாவினால் ஆன நூல் ஆகும். இதைவிடக் கலம்பகம் எனப்படும் நூல் வகையில் முதற் செய்யுளாகவும் கலிப்பாக்கள் காணப்படுகின்றன.

கலிப்பா துள்ளலோசையை அடிப்படையாகக் கொண்டது. துள்ளலோசை, சீர்களுக்கு இடையே அமையும் கலித்தளையால் விளைவதால், இத் தளையே கலிப்பாவுக்கு உரியது. எனினும் கலிப்பாவில் கலித்தளை மட்டுமே வரவேண்டும் என்ற கட்டுப்பாடு கிடையாது. இதில் கலித்தளையே அதிகமாக இருப்பினும் பிற வகைத் தளைகளும் வரலாம். கலிப்பா பொதுவாக அளவடி எனப்படும் நான்கு சீர்களைக் கொண்ட அடிகளைக் கொண்டிருக்கும்.

கலிப்பா உறுப்புக்கள்


பிறவகைப் பாக்கள் ஒரே உறுப்பாக அமைவது போல் இல்லாமல், கலிப்பா பல உறுப்புக்களைக் கொண்டு அமைகிறது. இவ்வுறுப்புக்கள், 1. தரவு, 2. தாளிசை, 3. அராகம், 4. அம்போதரங்கம், 5. தனிச்சொல், 6. சுரிதகம் எனும் ஆறு ஆகும்.

கலிப்பா வகைகள்


மேற்கூறியவற்றில் எந்தெந்த உறுப்புக்கள் அமைகின்றன, அவற்றின் எண்ணிக்கை, ஒழுங்கு என்பவற்றைப் பொறுத்துக் கலிப்பா மூன்று முதன்மை வகைகளாகப் பிரிக்கப்படுகின்றது. இவை,


1.    ஒத்தாழிசைக் கலிப்பா
2.    வெண் கலிப்பா
3.    கொச்சகக் கலிப்பா


என்பனவாகும். இவற்றுள் வெண் கலிப்பா தவிர்ந்த ஏனைய இரண்டு வகைக் கலிப்பாக்களுக்கும் துணை வகைகள் உண்டு. ஒத்தாழிசைக் கலிப்பாக்களுக்கு,


1.    நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா
2.    அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா
3.    வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா


என மூன்று துணைப்பிரிவுகளும், கொச்சகக் கலிப்பாவுக்கு,


1.    தரவுக் கொச்சகம்
2.    தரவிணைக் கொச்சகம்
3.    சிஃறாழிசைக் கொச்சகம்
4.    பஃறாளிசைக் கொச்சகம்
5.    மயங்கிசைக் கொச்சகம்


என ஐந்து துணைப்பிரிவுகளும் உள்ளன.


வெண்பா


வெண்பா மரபுச் செய்யுள் வகைகளுள் ஒன்றாகும். தமிழில் மரபுப் பாக்கள், ஒலிப்பியல் அடிப்படையில் அடி, சீர், அசை முதலியவற்றைக் கொண்டு வகை பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பன பரவலாக ஆளப்பட்டுள்ள பழம் பெரும் பாவினங்கள். அவற்றுள் வெண்பா என்னும் வகையில் ஒவ்வொரு பாடலும் இரண்டு முதல் பன்னிரண்டு அடிகள் வரைக் கொண்டிருக்கும். வெண்பாக்களுக்கான யாப்பிலக்கணம் ஒரு கட்டுக்கோப்பான இடம் சாரா இலக்கணம் என்று நிறுவப்பட்டுள்ளது.

குறிப்பிடத்தக்க வெண்பா நூல்கள்



  1. தமிழ் மரபுப்பா வகைகளில் மிகப் பழைய வடிவம் என்பதால் வெண்பாவில் இயற்றப்பட்டுள்ள நூல்கள் (அல்லது) தொகுப்புகளின் எண்ணிக்கை மிகுதி. ஒரு சிலவற்றை இங்கே குறிப்பிடலாம்.
  2. திருக்குறளின் ஆயிரத்து முன்னூற்றி முப்பது குறட்பாக்களும் வெண்பாக்களே. அவை வெண்பாக்களுள் ஏழு சீர்களே கொண்டு ஈரடியில் உள்ள குறள் வெண்பா வகையைச் சார்ந்தவை.நாலடியார் அல்லது நாலடி நானூறு என்பது நானூறு வெண்பாக்களால் ஆனதும், திருக்குறளை ஒத்ததுமான நீதிநூல் வகையைச் சேர்ந்தது.
  3. முத்தொள்ளாயிரம் என்பது வெண்பாக்களால் ஆன, காலத்தால் மிகவும் முற்பட்ட தொகை நூல். கிடைத்திருக்கும் 109 வெண்பாக்களில் மிகப் பெரும்பான்மையும் (ஏறத்தாழ முழுமையும்) நேரிசை வெண்பா வகையைச் சேர்ந்தவை. 
  4. நள வெண்பா மற்றுமொரு வெண்பாவாலான நூலாகும். 
  5. நீதி வெண்பாமற்றுமொரு வெண்பாவாலான நூலாகும். 
  6. திருப்பாவை திருவெம்பாவை ஆகியவை வெண்பா யாப்பில் வாரா என்ற போதிலும் முற்றிலும் வெண்டளையாக அமைந்து 'ஏலோர் எம்பாவாய்' என்ற ஈற்றுச் சீர்களை நீக்கினால், 'பாரோர் புகழப் படிந்து' போன்ற முச்சீர்களால் கச்சிதமாக அமைந்த பஃறொடை வெண்பா யாப்புக்கு முற்றிலும் பொருந்தியிருப்பதைக் காணலாம்.

இவற்றைத் தவிர, பலவகையான வெண்பாக்களில் அமைந்துள்ள பழைய/புதிய தமிழ் நூல்கள் ஏராளமானவை.


வகைகள்


  1.  குறள் வெண்பா
  2. சிந்தியல் வெண்பா
  3. நேரிசை வெண்பா
  4. இன்னிசை வெண்பா  
  5. பஃறொடை வெண்பா  
  6. சவலை வெண்பா

தமிழ் மரபுக் கவிதைகளின் அடிப்படைக் கூறுகள்


உயிர் எழுத்துக்களும், உயிர்மெய்யெழுத்துக்களும் தத்தம் ஒலி அளவுகளைப் பொருத்து குறில் அல்லது நெடில் என வழங்கப்படுகின்றன. குற்றெழுத்து மற்றும் நெட்டெழுத்துக்களின் அடுக்குகளை அசைகளாக வகுத்துள்ளனர். அசை என்பது முழுச்சொல்லாக இருக்க வேண்டும் என்பதல்ல, சொல்லின் பகுதிகளாகவும் இருக்கலாம்.


நேரசை மற்றும் நிரையசை என்று அசைகள் இரண்டு வகையாகும். குறிலோ நெடிலோ தனித்தோ ஒற்றடுத்தோ (ஒற்று = புள்ளி வைத்த எழுத்து) வருதல் நேரசையாகும். எடுத்துக்காட்டாக நேர், என், நீ, தேன் முதலான சொற்கள் நேரசைச் சொற்கள். இவ்வாறில்லாது இருகுறிலிணைந்து வருதலும், குறிலுக்குப் பின் நெடிலிணைந்து வருதலும், அல்லது இவை இரண்டும் ஒற்றடுத்து வருதலும் நிரையசையாகும். நிரை, படம், புறா முதலான சொற்கள் நிரையசை யாகும். ஒலிப்பியல் அடிப்படையில் அசைகளே கவிதைகளின் அடிப்படைக் கூறுகளாவன.
வசதிக்காக அசைகள் பின்வருமாறு பெயரிடப்படுகிறது.



நேர்நேர் - தேமா
நிரைநேர் - புளிமா
நேர்நிரை   - கூவிளம்
நிரைநிரை  -  கருவிளம்
நேர்நேர்நேர்  -   தேமாங்காய்
நேர்நேர்நிரை  -  தேமாங்கனி
நேர்நிரைநேர்  -  கூவிளங்காய்
நேர்நிரைநிரை    கூவிளங்கனி
நிரைநேர்நேர்  - புளிமாங்காய்
நிரைநேர்நிரை - புளிமாங்கனி
நிரைநிரைநேர் - கருவிளங்காய்
நிரைநிரைநிரை - கருவிளங்கனி

அசைகளின் தொடர் சீர் எனப்படும். சீர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வருதலால் தளைகள் உண்டாகும்.


வெண்பாவுக்கான யாப்பிலக்கணம்
யாப்பிலக்கண நெறிமுறைகள் மிகவும் கட்டுக்கோப்பானவை என்றும் அதனால் அவற்றை ஒரு இடம் சாரா இலக்கண முறையில் எழுத முடியும் என்றும் நிறுவப்பட்டுள்ளது. அந்நெறிமுறைகள் பின்வருவன:


 சீர்களுக்கான நெறிகள் 

1.    வெண்பா ஈரசைச் சீர்களான மாச்சீரையும், விளச்சீரையும் பெற்று வரும்.
2.    மூவசைச் சீர்களில் காய்ச்சீர் மட்டுமே வெண்பாவில் வரும்; கனிச்சீர் வராது.


நிலைமொழியீற்றசையைப் பொருத்து வருமொழி முதலசை அமைய வேண்டுமென வலியுறுத்தும் தளை நெறிகள்

வெண்பாவுக்கான தளைகள் இயற்சீர் வெண்டளை மற்றும் வெண்சீர் வெண்டளை ஆகும். 


1.    இயற்சீர் வெண்டளை - நிலைமொழி ஈற்றில் மாச்சீர் வர வருமொழி முதலில் நிரையசையே வர வேண்டும்; நிலைமொழி ஈற்றில் விளச்சீர் வர வருமொழி முதலில் நேரசையே வர வேண்டும்.


2.    வெண்சீர் வெண்டளை - நிலைமொழி ஈற்றில் காய்ச்சீர் வர வருமொழி முதலில் நேரசையே வர வேண்டும்.
வெண்பா செப்பலோசை பெற்று வரும்.
வெண்பாவுக்கான மேலெ தரப்பட்டுள்ள யாப்பிலக்கண நெறிகளுக்கு இணையான இடம் சாரா இலக்கணம் பின்வருமாறு:


<வெண்பா>    →    <அடி><ஈற்றடி>

<அடி>    →    <சீர்> <சீர்> <சீர்> <சீர்>
<ஈற்றடி>    →    <சீர்> <சீர்> <ஈற்றுச்சீர்>
<சீர்>    →    <ஈரசை> | <மூவசை>
<ஈற்றுச்சீர்>    →    <நாள்> | <மலர்> | <காசு> | <பிறப்பு>
<ஈரசை>    →    <தேமா> | <புளிமா> | <கருவிளம்> | <கூவிளம்>
<மூவசை>    →    <தேமாங்காய்> | <புளிமாங்காய்> | <கூவிளங்காய்> | <கருவிளங்காய்>


<தேமா>    →    <நேர்> <நேர்>
<புளிமா>    →    <நிரை> <நேர்>
<கருவிளம்>    →    <நிரை> <நிரை>
<கூவிளம்>    →    <நேர்> <நிரை>


<தேமாங்காய்>    →    <தேமா> <நேர்>
<புளிமாங்காய்>    →    <புளிமா> <நேர்>
<கருவிளங்காய்>    →    <கருவிளம்> <நேர்>
<கூவிளங்காய்>    →    <கூவிளம்> <நேர்>


<நாள்>    →    <நேர்>
<மலர்>    →    <நிரை>
<காசு>    →    <நேர்> <நேர்>
<பிறப்பு>    →    <நிரை> <நேர்>


<நேர்>    →    <குறில்> | <நெடில்> | <நேர்> <ஒற்று>
<நிரை>    →    <குறில்> <குறில்> | <குறில்> <நெடில்> | <நிரை> <ஒற்று>
<குறில்>    →    {குறுகிய ஒலியுடைய உயிர் எழுத்து அல்லது உயிர்மெய் எழுத்து}
<நெடில்>    →    {நெடிய ஒலியுடைய உயிர் எழுத்து அல்லது உயிர்மெய் எழுத்து}
<ஒற்று>    →    {மெய்யெழுத்து}


தளைகளுக்கான இலக்கண நெறிகள்:


இயற்சீர் வெண்டளை (மா முன் நிரை, விள முன் நேர்)
<வெண்பா>   → |
     → <தேமா>
     → <கூவிளம்>
     → <புளிமா>
     → <கருவிளம்>
     → <நாள்> | <காசு>[6]
     → <மலர்> | <பிறப்பு>[6]

வெண்சீர் வெண்டளை (காய் முன் நேர்)
     → <தேமாங்காய்>
     → <கூவிளங்காய்>
     → <புளிமாங்காய்>
     → <கருவிளங்காய்>



யாப்பருங்கலக்காரிகை



    ஆயிரம் ஆண்டுகளுக்கு மலோக, தமிழ் யாப்புப் பயில்வோரால் பெரிதும்     போற்றப்படும்     ஒரு நூல் யாப்பருங்கலக்காரிகை. தொல்காப்பியத்திற்குப் பின் தோன்றிய யாப்பியல் நூல்களுள் இதுவே சிறப்புப் பெற்றது. காரிகை என்றே
இந்நூல் குறிக்கப்படுகிறது.
 
ஆசிரியர்

    யாப்பு பற்றித் தமிழில் தோன்றிய யாப்பருங்கலக்காரிகை நூலின் ஆசிரியர் அமிதசாகரர் என்பவராவார். இவர் பெயர்அமுதசாகரர், அமிர்த சாகரர் என்பனவாகவும் வழங்கப்பெற்றுள்ளது. இப்பெயர் கீழ்வரும் சொற்களால் உருவானது.

     அமித = அளவு கடந்த
     சாகரர் = கடல் என்னும் பெயரர்

இதனை, ‘அளப்பரும் கடற்பெயர் அருந்தவத்தோனே’ என்னும் காரிகை நூலின் பாயிர அடியும் உறுதிப்படுத்தும். இவர் வரலாறுபற்றி ஏதும் சான்று கிடைக்கவில்லை. அருகக்கடவுளை இவர் வழிபட்டுள்ளார் என்பதை, பாயிர முதல் செய்யுளால் அறியலாம்.இதனால் இவர் சமணர் என்று அறிகிறோம்.

     அமிதசாகரர் காலம் கி.பி. 10-ஆம் நூற்றாண்டு. கி.பி. 11-ஆம்
நூற்றாண்டில் வீரசோழியம் எனும் நூலை இயற்றிய புத்தமித்திரனார் என்பவருக்குக் காலத்தால் முற்பட்டவர், இவர். யாப்பியலில் புலமை பெற்ற குணசாகரர் என்பவர் இந்நூலுக்கு உரை எழுதியுள்ளார். இவர் வரலாறு பற்றியும் ஏதும் சான்றுகள் கிடைக்கவில்லை.
 
நூல் யாப்பும், அமைப்பும்

     யாப்பருங்கலக்காரிகை என்னும் நூல் கட்டளைக் கலித்துறை என்னும் யாப்பில் இயற்றப்பட்டுள்ளது. காரிகை என்னும் சொல்லுக்கே கட்டளைக் கலித்துறை என்று ஒருபொருள் உள்ளது. இந்நூல் செய்யுள்கள் மகடூஉ முன்னிலையாக
எழுதப்பட்டுள்ளன.
 
மகடூஉ முன்னிலை

    எதிரில் ஒரு பெண் இருப்பது போலவும், அவளை விளித்து அவளிடம் பேசுவது போலவும் எழுதும் முறைக்கு மகடூஉ முன்னிலை என்று பெயர். மகடூஉ என்பதற்குப் பெண் என்று பொருள். முன்னிலை என்பதற்கு முன்னிலையாக்கிப் பேசுவது என்று பொருள். காரிகை என்பது பெண் என்னும் பொருள்தரும் ஒரு சொல். எனவே, காரிகையை முன்னிலைப்படுத்திப் பேசுவதாக இந்நூல் செய்யுள்கள் அமைந்திருப்பதால் இந்நூலுக்குக் காரிகை என்றும் ஒரு பெயர் வழங்குகிறது. இந்நூல் செய்யுள்களையும் காரிகை என வழங்குவதுண்டு.
 
கட்டளைக் கலித்துறை

    இந்நூல் செய்யுள்கள் எல்லாம் கட்டளைக் கலித்துறை என்னும் யாப்பினால் ஆனவையே. கட்டளைக் கலி என்பதற்கு எழுத்தெண்ணிப் பாடப்படும் கலி யாப்பு என்று பொருள். துறை என்பது பா இனத்தின் ஒரு வகைக்குரிய பெயர். 

     எழுத்தெண்ணிப்     பாடுகிறபொழுது     ஒற்றெழுத்துகள் அனைத்தையும் விட்டுவிட்டு, உயிர் அல்லது உயிர்மெய் எழுத்துகளை மட்டும் எண்ணி எழுதுவது வழக்கம். ஒரு (செய்யுள்) அடி நேரசையில் தொடங்கினால் ஒற்று நீக்கி 16 எழுத்துகள் இருக்குமாறும், நிரையசை கொண்டு தொடங்கினால் ஒற்று நீக்கி ௧௭ எழுத்துகள் இருக்குமாறும் பாடுவர். இதன்படி நான்கடிகள் உடைய ஒரு கலித்துறைச் செய்யுள் நேரசையில் தொடங்கினால் ஒரு செய்யுளில்     மொத்தம் 64 எழுத்துகளும், நிரையசையில் தொடங்கினால் அச்செய்யுளில் மொத்தம் 68 எழுத்துகளும் இருக்கும். 

     யாப்பருங்கலக்காரிகையில் நேரசை கொண்டு தொடங்கும் செய்யுள்கள் இருபத்தியொன்றும், நிரையசை கொண்டு தொடங்கும் செய்யுள்கள் இருபத்து மூன்றும் உள்ளதாக அந்நூலின் உரை கூறுகிறது. ஆயினும், இன்று கிடைக்கும் அச்சு நூல்களில் அறுபது காரிகைகள் உள்ளன. மிகுதியாக உள்ள 16 செய்யுள்கள்
உரையாசிரியரால் எழுதப்பட்ட உரைக்காரிகைகளாம்
 
காரிகை நூலின் அமைப்பு

    யாப்பருங்கலக்காரிகை மூன்று இயல்களை உடையது. நூல் அமைப்பைப் புரிந்து கொள்வதற்குக் கீழ்வரும் வரைபடம் உதவும்.

      முதல் இயலாகிய உறுப்பியலில் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகிய செய்யுள் உறுப்புகள் பற்றிக் கூறப்பட்டுள்ளன. 

     இரண்டாம் இயலாகிய     செய்யுளியலில் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய பாக்களுக்குரிய இலக்கணம் பேசப் பெற்றுள்ளது. இறுதியில் மருட்பா பற்றியும் கூறப்பட்டுள்ளது. நான்கு வகைப் பாக்களின் இனங்களும் கூறப்பட்டுள்ளன.

     ஒழிபியலில்     முன் இரு இயல்களில் இடம்பெற்ற செய்திகளுக்கான ஒழிபுச்செய்திகள் தரப் பெற்றுள்ளன.
 
ஒழிபுச் செய்திகள்

    ஒழிபுச் செய்திகள் என்பன முன்னர்க் கூறப்பட்ட செய்திகளுக்கு வேறுபட்டு வருவனவும், அங்குக் கூறப்படாதனவும், அங்குக் கூறப்பட்டவற்றிற்கு மேலும் விளக்கம் தருவனவும் ஆன செய்திகள் எனலாம்.




வஞ்சிப்பா


வஞ்சிப்பா என்பது தமிழ் யாப்பிலக்கணம் கூறும் பாவகைகளுள் ஒன்று. பாவகைகளுக்கு அடிப்படையான ஓசை வகைகளுள், தூங்கலோசையே வஞ்சிப்பாவுக்கு அடிப்படையாகும். வஞ்சிப்பாவின் அடிகளில் அமையும் சீர்களின் தன்மை மற்றும் அவற்றின் எண்ணிக்கை ஆகியவற்றைப் பொறுத்து வஞ்சிப்பாக்கள் இரு வகையாக உள்ளன. அவை,

1.    குறளடி வஞ்சிப்பா
2.    சிந்தடி வஞ்சிப்பா

எனப்படும். குறளடி என்பது இரண்டு சீர்களைக் கொண்ட அடியைக் குறிக்கும். எனவே குறளடி வஞ்சிப்பாக்களில் ஒவ்வொரு அடியிலும் இரண்டு சீர்கள் காணப்படும். சிந்தடி என்பது மூன்று சீர்களால் அமைந்த அடியைக் குறிக்கும். எனவே மூன்று சீர்களால் அமைந்த அடிகளைக் கொண்ட வஞ்சிப்பா சிந்தடி வஞ்சிப்பா ஆகும். இச் சீர்கள் மூன்று அசைகள் கொண்டவையாகவோ அல்லது நான்கு அசைகள் கொண்டவையாகவோ இருக்கலாம். மூவசைச் சீர்களாயின் அவை வஞ்சிச்சீர் என அழைக்கப்படும், நிரையசையை இறுதியில் கொண்ட சீர்களாக இருத்தல் வேண்டும். நான்கு அசைகளைக் கொண்ட சீர்கள் ஆயின் அவையும் நிரை அசையில் முடியும் சீர்களாக இருத்தல் வேண்டும்.

வஞ்சிப்பா குறைந்த அளவாக மூன்று அடிகளைக் கொண்டிருக்கும். தேவையைப் பொறுத்து அடிகளின் எண்ணிக்கை இதற்கு மேல் எத்தனையும் இருக்கலாம். வஞ்சிப்பாக்களின் முடிவில் தனிச்சொல், சுரிதகம் ஆகிய உறுப்புக்களும் அமைந்திருக்கும். சுரிதகம் எப்பொழுதும் ஆசிரியச் சுரிதகமாகவே இருக்கும்.


செய்யுள் வகைகள்


செய்யுள், பா என்னும் சொல்லாலும் வழங்கப்படுகின்றது. பாக்கள் நான்கு வகைகளாக உள்ளன. அவை,
  •    வெண்பா
  •   ஆசிரியப்பா
  •   கலிப்பா
  •   வஞ்சிப்பா
என்பனவாகும். சிறப்பானதாகக் கருதப்படாத மருட்பா என்னும் பாவகையையும் சேர்த்து பாக்கள் ஐந்து வகை எனக் கொள்வாரும் உள்ளனர்.


செய்யுள் - அறிமுகம்



செய்யுள் என்பது எடுத்துக்கொண்ட பொருள் விளங்கச் சுருக்கமாகச் செய்யப்படுவது. செய்யப்படுவதனால் இது செய்யுள் எனப்படுகின்றது. செய்யுள்கள் ஒரு இலக்கண வரம்புக்கு உட்பட்டே அமையவேண்டும். உரைநடைகளைப் போல் விரும்பியவாறு விரிவாகவும், வரையறை இல்லாமலும் எழுதக்கூடிய தன்மை செய்யுள்களுக்கு இல்லாவிட்டாலும், செய்யுள்கள் ஓசை நயம் விளங்கச் செய்யப்படுகின்றன. இதனால் செய்யுள்கள் மனப்பாடம் செய்வதற்கு இலகுவானவை. எழுத்துமூல நூல்கள் பரவலாகக் கிடைப்பதற்கு அரிதாக இருந்த பழங்காலத்தில் அரிய நூல்களில் சொல்லப்பட்டவற்றைத் தேவையானபோது நினைவுக்குக் கொண்டுவரவும், அவை பல தலைமுறைகள் நிலைத்து நிற்பதற்கும் மனப்பாடம் செய்வது இன்றியமையாததாக இருந்தது. இதனால் அக்காலத்து நூல்கள் அனைத்தும் செய்யுள் வடிவிலேயே இயற்றப்பட்டன.


செய்யுளியல்

தமிழ் இலக்கணத்திலே செய்யுள்களுக்கான இலக்கணங்களை விளக்கும் பகுதி செய்யுளியல் எனப்படுகின்றது. இன்று நனக்குக் கிடைப்பவற்றுள் மிகப் பழைய தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் செய்யுள் இலக்கணம் பற்றி அதன் பொருளதிகாரத்தில் விரிவாகப் பேசுகிறது. தொல்காப்பியம் பின்வரும் 34 செய்யுள் உறுப்புக்களைப் பற்றி விளக்குகிறது.

1. மாத்திரை, 2. எழுத்து, 3. அசை, 4. சீர், 5. அடி, 6. யாப்பு, 7. மரபு, 8. தூக்கு, 9. தொடை, 10. நோக்கு, 11. பா, 12. அளவியல், 13. திணை, 14. கைகோள், 15. கண்டோர், 16. கேட்போர், 17. இடம், 18. காலம், 19, பயன், 20. மெய்ப்பாடு, 21. எச்சம், 22. முன்னம், 23. பொருள், 24. துறை, 25. மாட்டு, 26. வண்ணம், 27. அம்மை, 28. அழகு, 29. தொன்மை, 30. தோல், 31. விருந்து, 32. இயைபு, 33. புலன், 34. இழை.