Friday, October 30, 2009

செய்யுள் - அறிமுகம்



செய்யுள் என்பது எடுத்துக்கொண்ட பொருள் விளங்கச் சுருக்கமாகச் செய்யப்படுவது. செய்யப்படுவதனால் இது செய்யுள் எனப்படுகின்றது. செய்யுள்கள் ஒரு இலக்கண வரம்புக்கு உட்பட்டே அமையவேண்டும். உரைநடைகளைப் போல் விரும்பியவாறு விரிவாகவும், வரையறை இல்லாமலும் எழுதக்கூடிய தன்மை செய்யுள்களுக்கு இல்லாவிட்டாலும், செய்யுள்கள் ஓசை நயம் விளங்கச் செய்யப்படுகின்றன. இதனால் செய்யுள்கள் மனப்பாடம் செய்வதற்கு இலகுவானவை. எழுத்துமூல நூல்கள் பரவலாகக் கிடைப்பதற்கு அரிதாக இருந்த பழங்காலத்தில் அரிய நூல்களில் சொல்லப்பட்டவற்றைத் தேவையானபோது நினைவுக்குக் கொண்டுவரவும், அவை பல தலைமுறைகள் நிலைத்து நிற்பதற்கும் மனப்பாடம் செய்வது இன்றியமையாததாக இருந்தது. இதனால் அக்காலத்து நூல்கள் அனைத்தும் செய்யுள் வடிவிலேயே இயற்றப்பட்டன.


செய்யுளியல்

தமிழ் இலக்கணத்திலே செய்யுள்களுக்கான இலக்கணங்களை விளக்கும் பகுதி செய்யுளியல் எனப்படுகின்றது. இன்று நனக்குக் கிடைப்பவற்றுள் மிகப் பழைய தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் செய்யுள் இலக்கணம் பற்றி அதன் பொருளதிகாரத்தில் விரிவாகப் பேசுகிறது. தொல்காப்பியம் பின்வரும் 34 செய்யுள் உறுப்புக்களைப் பற்றி விளக்குகிறது.

1. மாத்திரை, 2. எழுத்து, 3. அசை, 4. சீர், 5. அடி, 6. யாப்பு, 7. மரபு, 8. தூக்கு, 9. தொடை, 10. நோக்கு, 11. பா, 12. அளவியல், 13. திணை, 14. கைகோள், 15. கண்டோர், 16. கேட்போர், 17. இடம், 18. காலம், 19, பயன், 20. மெய்ப்பாடு, 21. எச்சம், 22. முன்னம், 23. பொருள், 24. துறை, 25. மாட்டு, 26. வண்ணம், 27. அம்மை, 28. அழகு, 29. தொன்மை, 30. தோல், 31. விருந்து, 32. இயைபு, 33. புலன், 34. இழை.

 


No comments:

Post a Comment