Friday, October 30, 2009

ஆசிரியப்பா


ஆசிரியப்பா என்பது, தமிழின் யாப்பியலில் சொல்லப்படும் பாவகைகளுள் ஒன்று. இது அகவலோசையைக் கொண்டு அமைவது. ஆசிரியத்தளை எனப்படும் தளை வகையே இப் பாவுக்கு உரியது. எனினும் வேறு தளைகளும் இடையிடையே வருவது உண்டு.


இவ்வகைப் பாக்கள் மூன்று அடிகள் தொடக்கம் எத்தனை அடிகள் கொண்டதாகவும் இருக்கலாம். அடிகளின் எண்ணிக்கைக்கு மேல் எல்லை கிடையாது. ஆசிரியப்பாவின் அடிகள் நான்கு சீர்களைக் கொண்ட அளவடியாகவோ, மூன்று சீர்கள் கொண்ட சிந்தடியாகவோ, இரண்டு சீர்களைக் கொண்ட குறளடியாகவோ அமையலாம். ஐந்து சீர்களைக் கொண்ட அடிகளும் இடம்பெறலாம். எனினும் முதல் அடியும் இறுதி அடியும் அளவடிகளாக இருத்தல் வேண்டும்.


ஆசிரியப்பாவின் இறுதி அசை ஏ, ஓ, என், ஈ, ஆ, ஆய், அய் என்னும் அசைகளுள் ஒன்றாக இருத்தல் வேண்டும் என்ற விதியும் உண்டு.

துணைவகைகள்


ஆசிரியப்பாக்கள், அவற்றில் இடம்பெறும் அடிகளின் தன்மைகளை ஒட்டிக் கீழ்க்காட்டியவாறு நான்கு வகைப்படுகின்றன.


1.    நேரிசை ஆசிரியப்பா
2.    நிலைமண்டில ஆசிரியப்பா
3.    அறிமண்டில ஆசிரியப்பா
4.    இணைக்குறள் ஆசிரியப்பா


பொதுவான ஆசிரியப்பாவுக்குரிய இயல்புகளுடன் மேற்காட்டிய வகைகள் சில சிறப்பு அம்சங்களைக் கொண்டவையாக இருக்கின்றன. அவ்வாறான சிறப்பு அம்சங்கள் கீழே தரப்பட்டுள்ளன.


நேரிசை ஆசிரியப்பா - கடைசிக்கு முந்திய அடி மூன்று சீர்களைக் கொண்டிருத்தல்.
நிலைமண்டில ஆசிரியப்பா - எல்லா அடிகளும் நான்கு சீர்களைக் கொண்டிருத்தல்.

அறிமண்டில ஆசிரியப்பா - எல்லா அடிகளும் பொருள் முற்றிய நாற்சீர் அடிகளாய் இருத்தல்.

இணைக்குறள் ஆசிரியப்பா - இதன் முதல் மற்றும் இறுதியடிகள் தவிர்ந்த இடையிலுள்ள அடிகள் இரண்டு, மூன்று அல்லது நான்கு சீர்களைக் கொண்ட அடிகள் கலந்து அமையலாம்.

எடுத்துக்காட்டு நூல்கள்


பெரும்பாலான பழந்தமிழ் நூல்கள் ஆசிரியப்பாவில் அமைந்தவையே. புறநானூறு, அகநாநூறு, குறுந்தொகை, நற்றிணை, மணிமேகலை என்பன இப் பாவகையில் எழுந்த நூல்களுக்கு எடுத்துக் காட்டுக்கள் ஆகும்.


No comments:

Post a Comment